‘நீட்’ விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கை மீறும் வகையில் மாணவர்களை தூண்டும் நபர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடாது


‘நீட்’ விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கை மீறும் வகையில் மாணவர்களை தூண்டும் நபர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடாது
x
தினத்தந்தி 11 Sept 2017 4:30 AM IST (Updated: 11 Sept 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கை மீறும் வகையில் மாணவர்களை தூண்டும் நபர்களை பள்ளி-கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்களிடம் கலெக்டர் ரோகிணி அறிவுறுத்தினார்.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு ‘நீட்’ தேர்வு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி பொதுமக்களின் அன்றாட பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், ‘நீட்’ தேர்விற்கு எதிராக போராட்டங்கள், வேலைநிறுத்தம், மனித சங்கிலி போராட்டம், சாலை மறியல், ரெயில் மறியல் உள்ளிட்ட பிற செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தற்போது உங்களுக்கு கோர்ட்டு தீர்ப்பு குறித்து எடுத்து கூறப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகல்களை அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளின் தகவல் பலகைகளில் மாணவர்கள் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் வைக்க வேண்டும்.

மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையிலும், பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்குள் வெளிநபர்கள் மாணவர்களை தவறாக வழிநடத்தும் வகையிலும் துண்டு பிரசுரங்கள் வழங்குவதை தடுக்க வேண்டும். ‘நீட்‘ தேர்வு தொடர்பாக சட்டம், ஒழுங்கை மீறும் வகையில் மாணவர்களை தூண்டும் நபர்களை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யுமாறு கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மேட்டூர் உதவி கலெக்டர் மேகநாதரெட்டி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story