மேட்டூர் அணை நீர்மட்டம் 73.44 அடியாக உயர்வு: சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா?


மேட்டூர் அணை நீர்மட்டம் 73.44 அடியாக உயர்வு: சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா?
x
தினத்தந்தி 11 Sept 2017 4:30 AM IST (Updated: 11 Sept 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை நீர்மட்டம் 73.44 அடியாக உயர்ந்தது. இதனால் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா? என டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மேட்டூர்,

ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் முடிய பெய்யும் தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு இந்த ஆண்டு கைகொடுக்கவில்லை. இதனால் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்கு திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இன்று வரை பாசனத்திற்காக திறக்கப்படவில்லை. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை அவ்வப்போது தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்பட முக்கிய அணைகள், அதன் முழு கொள்ளளவை எட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ளன. இதன் காரணமாக இந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வேளையில் அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடுகின்றனர். இந்த தண்ணீர் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப்பகுதிகளான பிலிகுண்டுலுவை கடந்து மேட்டூர் அணையை வந்தடைகிறது.

இந்த நீர்வரத்தின் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 73.44 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 880 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.

இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் அளிக்க முடியாத நிலை நீடித்து வந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 73.44 அடியாக உயர்ந்து உள்ளதால் சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். எனவே, டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வருணபகவான் கைகொடுக்க வேண்டுமென அவர்கள் வேண்டி வருகின்றனர்.கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 79 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :
Next Story