ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை: நாகராஜா கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்


ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை: நாகராஜா கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 11 Sept 2017 4:15 AM IST (Updated: 11 Sept 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் நாகராஜா கோவிலில், ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி பக்தர்கள் குவிந்தனர்.அவர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களுள் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு சிறப்பு வாய்ந்ததாகும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும், நாகதோ‌ஷம் நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

 ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

நீண்ட வரிசை

உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தோரும், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வாகனங்களில் குடும்பத்துடன் வந்து இருந்தனர்.  இதனால், அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேரம் செல்ல, செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் நீண்ட நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

 கோவிலுக்கு வெளியேயும் நீண்ட வரிசை காணப்பட்டது. இதனால், அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வழிபாடு

 சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களில் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகம் வந்திருந்தனர். அவர்கள், அங்குள்ள நாகர் சிலைகளுக்கு பால்ஊற்றியும், மஞ்சள்பொடி தூவியும் வழிபட்டனர்.


Next Story