பெங்களூருவில் எழுத்தாளர்கள் நாளை ஊர்வலம்


பெங்களூருவில் எழுத்தாளர்கள் நாளை ஊர்வலம்
x
தினத்தந்தி 11 Sept 2017 5:00 AM IST (Updated: 11 Sept 2017 5:00 AM IST)
t-max-icont-min-icon

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் எழுத்தாளர்கள் நாளை ஊர்வலம் நடத்துகிறார்கள்.

பெங்களூரு,

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 5–ந் தேதி பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் இந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டன. இந்த சம்பவத்தை கண்டித்து கன்னட எழுத்தாளர்கள் சார்பில் நாளை(செவ்வாய்கிழமை) பெங்களூருவில் ஊர்வலம் நடக்கிறது. இதுகுறித்து எழுத்தாளர் கோவிந்தராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து எழுத்தாளர்கள் சார்பில் 12–ந் தேதி(நாளை) ஊர்வலம் நடத்துகிறோம். பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கும் ஊர்வலம் சென்டிரல் கல்லூரி மைதானம் வரை நடைபெறும். பின்னர் அங்கு மாநாடு நடைபெறும். இதில் ஏராளமான முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள், திரைத்துறையை சேர்ந்த கலைஞர்கள், போராட்டக்காரர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் என 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள்.

கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை ஒரு நபரை கொன்றதாக எடுத்துக்கொள்ள முடியாது. இத்தகைய கொலை மூலம் சிந்தனையாளர்களை தங்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதில் இருந்து எந்த வகையிலும் தடுக்க முடியாது. கோழைகள் தான் முற்போக்கு சிந்தனையாளர்களை குறி வைத்து கொலை செய்கிறார்கள். இது அவர்களின் தோல்வியை காட்டுகிறது.

தலையிலும், மார்பிலும் குண்டுகளை செலுத்தினால் சிந்தனையை கொன்றுவிடலாம் என்று நினைப்பது முட்டாள்தனமானது. கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டது என்பது சிந்தனையாளர்கள் மீதான தாக்குதல் ஆகும். இது எழுத்தாளர்கள், போராட்டக்காரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கோவிந்தராவ் கூறினார்.


Next Story