மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடியூரப்பா நேரில் பார்வையிட்டார்


மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடியூரப்பா நேரில் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 10 Sep 2017 11:40 PM GMT (Updated: 2017-09-11T05:10:02+05:30)

பெங்களூருவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடியூரப்பா நேரில் பார்வையிட்டார்.

பெங்களூரு,

பெங்களூருவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்ததால் பெங்களூரு வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று பெங்களூரு நந்தகோகுல லே–அவுட்டில் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டார். அந்த பகுதி மக்களிடம் பேசிய எடியூரப்பா அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். அதன் பிறகு எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:–

கனமழையால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் புகுந்துவிட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு தெருவுக்கு வந்துவிட்டனர். அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் இந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவின் வளர்ச்சிக்கு மாநில அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவழித்து உள்ளதாக முதல்–மந்திரி சித்தராமையா சொல்கிறார். அந்த பணம் எங்கே போனது?. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை இந்த அரசு செய்ய வேண்டும். தேங்கியுள்ள மழைநீரை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழையால் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் திறன் இந்த அரசுக்கு இல்லை. கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்துவிட்டது. கொலை செய்யப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேசுக்கு மிரட்டல் இருப்பது குறித்து அரசுக்கு தகவல் வந்தது. அவருக்கு இந்த அரசு உரிய பாதுகாப்பு வழங்காமல் இருந்தது ஏன்?.

துமகூருவில் சித்தகங்கா ஆஸ்பத்திரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறக்கும் விழாவில் கலந்துகொள்ள நான் அங்கு சென்றேன். அங்கு ஆஸ்பத்திரி வந்துள்ளதால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த பயன் அடைவார்கள். அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு முக்கியமான சிகிச்சைகளுக்கு மக்கள் பெங்களூரு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இந்த ஆஸ்பத்திரியில் அந்த வசதிகள் கிடைக்கும் என்பதால் இனிமேல் மக்கள் இங்கே சிகிச்சைகளை பெற முடியும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

எடியூரப்பாவுடன் பி.சி.மோகன் எம்.பி., பெங்களூரு மாநகராட்சி பா.ஜனதா குழு தலைவர் பத்மநாபரெட்டி உள்பட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.


Related Tags :
Next Story