காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்வதற்கு முன்பாகவே கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறாது
காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்வதற்கு முன்பாகவே கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறாது என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
மைசூரு,
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2018) ஏப்ரல் அல்லது மே மாதம் தான் தேர்தல் வரும். அதற்கு முன்பு தேர்தல் வராது. கர்நாடகத்தில் எனது(சித்தராமையா) தலைமையிலான காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும். பா.ஜனதாவினர் மக்கள் மத்தியில் தவறான கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்வதற்கு முன்பாகவே கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறும் என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.
தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகுதான் கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறும். இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது. தற்போது கொலையாளிகள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.கர்நாடகத்தில் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரையும் கணக்கெடுத்த பிறகு, அவர்கள் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும். அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டாம் என்று சொன்னாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மறைமுகமாக அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை.
கர்நாடகத்தில் இந்த ஆண்டு பருவழை நன்றாக பெய்து வருகிறது. அணைகள் நிரம்பி வருகின்றன. விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் தேவையான தண்ணீர் கிடைத்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு குடிநீர் பஞ்சம் ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து முதல்–மந்திரி சித்தராமையா மைசூரு டவுனில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள காரில் புறப்பட்டு சென்றார்.