விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை பெங்களூரு வெள்ளக்காடாக மாறியது
நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பெங்களூருவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது
பெங்களூரு,
நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பெங்களூருவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரம் அடைந்துள்ளது. கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நகரில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த கனமழைக்கு கார் மீதுவேரோடு மரம் சாய்ந்தது. இதில் 4 பேர் பலியாயினர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் மழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நகரில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. மைசூரு ரோட்டில் உள்ள கெங்கேரி பகுதியில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. டி.ஜே.ஹள்ளி பகுதியில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கே.ஆர்.புரம், நெலமங்களா ஆகிய பகுதிகளிலும் தலா ஒரு வீடு இடிந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அதேப்போல் கனமழைக்கு மாகடி ரோட்டில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கெங்கேரி அருகே உள்ள துபாசிபாளையா, கொம்மகட்டா ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தன. தற்போது 2 ஏரிகளும் நிரம்பி வழிகிறது. அதில் இருந்து நீர் வெளியேறி அருகில் உள்ள கெங்கேரி குடியிருப்புகளில் புகுந்தது. இதனால் அந்தப் பகுதிகள் தண்ணீர் சூழ்ந்து தீவு போல் காட்சி அளிக்கிறது. அத்துடன் மைசூரு ரோடு விருசுபாவதி ஆற்றிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. காட்டாற்று வெள்ளத்தில் சரக்கு வாகனம் ஒன்று அடித்து செல்லப்பட்டு, கரையோரத்தில் ஒதுங்கியது.மேலும் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் முழங்கால் உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றதால், அதில் பஸ்கள் மற்றும் கார்கள் நீந்தி சென்றன. அவ்வாறு தண்ணீரில் செல்ல முயன்ற ஒரு பஸ் நடுரோட்டில் பழுதாகி நின்றது. இதனால் அதில் இருந்து பயணிகள் இறங்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, பயணிகளை பஸ்களில் இருந்து பத்திரமாக மீட்டனர். அவர்கள் படகு மூலமாக வேறு பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஹெப்பால் சஞ்சய்நகரில் ஒரு பெரிய மரம் முறிந்து விழுந்தது. தொட்டபிதரகல்லு பகுதியில் சாக்கடை கால்வாய் நிரம்பி அதில் இருந்து தண்ணீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் வீட்டை வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர்.
பெங்களூரு புறநகர் மாவட்டம் கக்கலிபுரா பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்ததால், 30–க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு நோயாளிகள் அங்கிருந்து வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கொட்டிகெரே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் தரை தளத்தில் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதனால் அந்த கட்டிடத்தில் வசிக்கும் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.அனுகிரகா லே–அவுட்டில் தண்ணீர் தேங்கி நின்று வெள்ளக்காடாக மாறியது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தூக்கத்தை தொலைத்தனர். அவர்கள் தங்களின் வீடுகளில் இருந்து தண்ணீரை எடுத்து வெளியே ஊற்றினர். எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் 6–வது நுழைவுவாயில் பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக மழை நீர் இன்போசிஸ் நிறுவன அலுவலகத்திற்குள் புகுந்தது. அந்த நீரை அந்த நிறுவன ஊழியர்கள் அகற்றினர்.
இதற்கிடையே பெங்களூருவில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கெங்கேரி பகுதியில் மேயர் பத்மாவதி நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பொக்லைன் வாகனத்தை வரவழைத்த மேயர், ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் மண்ணை கொட்டி தடுப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தார். அதைத்தொடர்ந்து சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை பம்பு செட்டுகள் மூலம் அகற்றும்படி மேயர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அந்த பணிகளை அதிகாரிகள் தொடங்கினர்.மீண்டும் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து விஜயவாணி லே–அவுட்டுக்கு சென்ற மேயர் அங்கு மழைநீர் தேங்கி நிற்பதை பார்த்தார். அந்த நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்த மேயர், மழை பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உடன் இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு பெங்களூரு மட்டுமின்றி துமகூரு, ராமநகர், சிக்பள்ளாப்பூர், பாகல்கோட்டை, ஹாசன், உடுப்பி, மண்டியா, கதக், பீதர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. மழையால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெங்களூருவில் 70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமநகர் மாவட்டம் மாகடியில் 140 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. துமுகூரு மாவட்டம் சிராவில் 110 மில்லி மீட்டரும், நெலமங்களாவில் 90 மில்லி மீட்டரும், பாகல்கோட்டை, மண்டியா மாவட்டம் பசரலுவில் 80 மில்லி மீட்டரும், தட்சிண கன்னட மாவட்டம் தர்மசாலா, சிக்கமகளூரு, ஹாசன் மாவட்டம் துட்டா, மண்டியா மாவட்டம் பெல்லூரி, துமகூரு மாவட்டம் சிக்கனஹள்ளி, உலியூர்துர்கா ஆகிய பகுதிகளில் தலா 70 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.
பெங்களூருவில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெங்களூரு உள்பட தென் கர்நாடகம் மற்றும் உள் மாவட்டங்கள், வட கர்நாடகத்தில் சில பகுதிகளில் நாளை(செவ்வாய்க்கிழமை) வரை மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்யும்“ என்று கூறப்பட்டுள்ளது.