பஸ்நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் பலி: சோமனூர் பகுதிகளில் கடைகள் அடைப்பு அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம்
பஸ்நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் பலியாகினர். இதனால் சோமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் அனைத்து கட்சிகளின் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
சூலூர்,
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே சோமனூர் பஸ் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், அரசு பஸ் கண்டக்டர் சிவக்குமார், நர்சிங் மாணவி தாரணி, பழனியப்பன், ஈஸ்வரி மற்றும் துளசி ஆகிய 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் கடந்த 7–ந் தேதி நடந்தது. சோமனூர் பஸ்நிலைய கட்டிடத்தை முறையாக பராமரிக்காததே இந்த விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், விபத்துக்கு காரணமான அரசு அதிகாரிகளின் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடையடைப்பு நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சியினர் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி சோமனூர், கருமத்தம்பட்டி, சாமளாபுரம், கிட்டாம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்பட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதையடுத்து தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு கிருஷ்ணாபுரத்தில் இருந்து சோமனூர் பஸ்நிலையம் வரை மவுன ஊர்வலமாக சென்று பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதில் கோவை புறநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி.மனோகரன், மாவட்ட பொருளாளர் கணேசமூர்த்தி, தி.மு.க. நகர செயலாளர் எஸ்.தங்கவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் நித்யா மனோகரன், ம.தி.மு.க. தங்கவேல், ஆனந்தகுமார், கொ.ம.தே.க. மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, மாவட்ட செயலாளர் பிரிமியர் செல்வம், சமூக ஆர்வலர்கள் பிரபாகரன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அனைத்து கட்சிகள் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஊர்வலம் மற்றும் கூட்டம் நடைபெற்ற போது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக நேற்று மாலை 4 மணியளவில் பா.ஜனதா கட்சி சார்பில், கருமத்தம்பட்டி நால்ரோட்டில் இருந்து சோமனூர் பஸ்நிலையம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், அகில இந்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஊர்வலம் பஸ்நிலையத்துக்கு வந்தவுடன், அங்கு வைக்கப்பட்டு இருந்த பலியான 5 பேரின் படத் துக்கு அஞ்சலி பாரதீய ஜனதா கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட தலைவர் மோகன் மந்த்ராச்சலம், மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியமூர்த்தி, முன்னாள் ஒன்றிய தலைவர் எஸ்.சதாசிவம், கருமத்தம்பட்டி, சூலூர் மண்டல தலைவர்கள் மாணிக்கவாசகம், பரமசிவம், ஜி.கே.நாகராஜ், வெற்றி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.