கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2017 4:30 AM IST (Updated: 12 Sept 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விழுப்புரத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7-வது ஊதிய குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பினர் கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். விழுப்புரம் மாவட்டத்திலும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட 17 சங்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், தமிழக அரசின் அச்சுறுத்தலையும் மீறி 60 சதவீதம் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதன்தொடர்ச்சியாக நாளை (அதாவது இன்று) சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார். பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாததால் மாற்று ஆசிரியர்கள் மூலம் நேற்று காலாண்டு தேர்வு நடந் தது. இந்த தேர்வு கடமைக்காக நடத்தப்படுவதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் ரகீம் தலைமை தாங்கினார். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் சத்தியமூர்த்தி, வட்டார செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் ரவிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், ரிஷிவந்தியம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Next Story