மணப்பாறை அருகே மணல் சரிந்து விழுந்து தொழிலாளி பலி


மணப்பாறை அருகே மணல் சரிந்து விழுந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 12 Sept 2017 4:30 AM IST (Updated: 12 Sept 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த போது திடீரென மணல் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

மணப்பாறை,

மணப்பாறை அருகே உள்ள மான்பூண்டி ஆற்றில் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. ஆற்றின் பல்வேறு இடங்களில் சுமார் 20 அடி ஆழம் வரை மணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணப்பாறையை அடுத்த குமரப்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், தனக்கு சொந்தமான டிராக்டரில் வடக்கிப்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளியான கார்த்திக்(வயது 24) உள்பட 4 பேருடன் கண்ணுடையான்பட்டியில் உள்ள மான்பூண்டி ஆற்றுப்பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தார்.

ஆற்றில் சுமார் 20 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டு மணல் அள்ளப்பட்டது. அந்த பள்ளத்திற்குள் ஒரு பகுதியில் கார்த்திக் மணல் அள்ளிக் கொண்டிருந்தார். அவருடன், அவருடைய சகோதரர் பாலசுப்பிரமணியன் மற்றும் உடன் வந்தவர்களும் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக மேல் பகுதியில் இருந்த மணல் திடீரென முழுவதுமாக சரிந்து பள்ளத்தில் விழுந்தது.

மணல் மூடியது

இதில் கார்த்திக் மீது மணல் மூடியது. இதை பார்த்த பாலசுப்பிரமணியன் கார்த்திக்கை மீட்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் மீட்க முடியவில்லை. பின்னர் உடனடியாக அங்கிருந்த ஒருவரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினார். இதனால் பதறிய கார்த்திக் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நள்ளிரவில் ஆற்றுப்பகுதிக்கு சென்று மணலில் சிக்கிய கார்த்திக்கை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் மணலில் புதைந்த கார்த்திக் எந்த இடத்தில் சிக்கிக் கொண்டார் என்பது தெரியாமல் இருட்டு நேரத்தில் அங்குமிங்கும் தடுமாறினர்.

பின்னர் மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு சென்று தகவல் தெரிவித்தனர். உடனடியாக மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி, இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையிலான போலீசாரும், தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும், வருவாய் துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

பிணமாக மீட்பு

இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மணலை தோண்டிய போது கார்த்திக் பிணமாக கிடந்தது தெரிந்தது. கார்த்திக்கின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கார்த்திக்கின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர்.

அங்கு கார்த்திக்கின் உடலைப் பார்த்து, அவருடைய உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கார்த்திக்கின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

கைது-டிராக்டர் பறிமுதல்

கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இது போன்று உயிரிழக்கும் சம்பவத்தை தடுத்திடவும், அனுமதியின்றி ஆறுகளில் மணல் அள்ளுவதை தடுத்திடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கார்த்திக்கின் உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

மணல் எடுக்கப்பட்ட பகுதி ஆபத்தான பகுதி என்று தெரிந்தும், ரவிச்சந்திரன் தொழிலாளர்களை அழைத்துச் சென்று அனுமதியின்றி மணல் கடத்தியதாக கண்ணுடையான்பட்டி கிராம நிர்வாக அதிகாரி நாகராஜ் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர். மணல் சரிந்து தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story