கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர்-அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர்-அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2017 4:30 AM IST (Updated: 12 Sept 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர்- அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்- அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கடந்த 7-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். கடந்த சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறைக்கு பின் நேற்று முதல் மீண்டும் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. தங்களது 3 அம்ச கோரிக்கைகளுடன் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் ஆசிரியர்- அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று முதல் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்கக்கல்வி துறையில் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை. அரசு ஊழியர்கள் பலரும் வேலைக்கு செல்லாததால் பல்வேறு துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அலுவலக பணிகள் பாதிப்படைந்தன.

ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஆசிரியர்- அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டம் மதியம் 1 மணி வரை நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் வேலுமணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் குமாரவேல் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து நிற்க முடியாததால் தரையில் பலர் அமர்ந்தனர்.

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க பெண்கள் சிலர் தலையை சேலையால் மூடியபடியும், சிலர் குடைப் பிடித்தப்படியும், கைக்குட்டையை தலையில் போட்டு மூடியும் அமர்ந்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதேபோல கரூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் பலர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரி வளாகம் முன்பு கல்லூரி ஆசிரியர்கள் கழகத்தின் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்- அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

விளக்கம் கேட்டு கடிதம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்-அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது. இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர். நாளை (புதன்கிழமை) முதல் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கிடையில் பணிக்கு வராத ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களிடம் விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர். இதேபோல அரசு ஊழியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

Next Story