டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மனு


டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மனு
x
தினத்தந்தி 12 Sept 2017 4:15 AM IST (Updated: 12 Sept 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

வடகாடு பிலாக்கொல்லையில் டாஸ்மாக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். அப்போது தி.மு.க. நகர செயலாளர் நைனாமுகமது தலைமையில் தி.மு.க.வினர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 41-வது வார்டில் உள்ள சேங்கை தோப்பு, செல்லையாநகர், சேங்கை கொல்லை ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் நகராட்சிக்கு வரி செலுத்தியும், நகராட்சியின் குடிநீர் வசதி பெற்றும், மின் இணைப்பு பெற்றும் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள மின் இணைப்புகள் மட்டும் ஆலங்குடி மின்சார மையத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால் இங்கு உள்ள மக்கள் மின் கட்டணம் செலுத்த திருவரங்குளம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் மின்சாரம் தொடர்ச்சியாக குறைந்த மின் அழுத்தத்தில் கிடைப்பதால், அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும் செல்லயைா நகர் பகுதியில் உள்ள மின்கம்பங்கள் கீழே சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இது குறித்து கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

இதேபோல ஆலங்குடி தாலுகா வடகாடு பகுதியை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் மக்களின் எதிர்ப்பால் டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. இந்த மதுக்கடைகளை மீண்டும் திறக்க முயற்சி செய்யும்போது நாங்கள் பல போராட்டம் நடத்தினோம். அப்போது அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம் எனறு உறுதி அளித்தார்கள். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் பிலாக்கொல்லை பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் நாங்கள் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எனவே பிலாக்கொல்லை பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கலெக்டர் அனுமதி வழங்கக்கூடாது என கூறியிருந்தனர்.

இதேபோல பள்ளத்திவிடுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 2 மாதமாக 100 நாள் திட்டத்தில் வேலை வழங்கப்படவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் எங்கள் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு பணம் இல்லாமலும், சில நேரங்களில் சாப்பாட்டிற்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்தும் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வழிவகை செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

விளம்பர பதாகைகளை அகற்றக்கோரி மனு

இதேபோல தே.மு.தி.க.வினர் கொடுத்த மனுவில், அ.தி.மு.க.வினர் அவர்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பிருந்தாவனம், டி.வி.எஸ். கார்னர், பேராங்குளம், திருக்கோகர்ணம், திருவப்பூர் ரெயில்வே கேட், பழனியப்பா பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விளம்பர பதாகைகள் வைத்து உள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் செல்லும் இடம் தெரியாமல் வாகனத்தை நிறுத்திவிட்டு வழியை கண்டுபிடிக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து அனு மதியின்றி வைக்கப்பட்டு உள்ள விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என கூறியிருந்தனர். 

Related Tags :
Next Story