144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் காவிரி மகா புஷ்கர விழா இன்று தொடங்குகிறது


144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் காவிரி மகா புஷ்கர விழா இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 12 Sept 2017 4:15 AM IST (Updated: 12 Sept 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் காவிரி மகா புஷ்கர விழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி ஸ்ரீரங்கத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

ஸ்ரீரங்கம்,

புஷ்கரம் என்பது நதிகளுக்கு உரிய விழாவாகும். புஷ்கரம் என்றால் தீர்த்தகுரு, ஆதிகுரு என்று பொருள்படும். புஷ்கர திருவிழா ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்் பெயரும் போது அந்தந்த ராசிகளுக்கு உரிய நதிகளில் நடைபெறுவது ஆகும்.

மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் புஷ்கரமானவர் குருப்பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாள் பிரவேசம் செய்வதாகவும், குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம்் பெயரும் போது துலாம் ராசிக்கு உரிய காவிரி நதியில் புஷ்கரமானவர் செப்டம்பர் 12-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை வாசம் செய்வது ஐதீகம்.

அதன்படி காவிரியில் இந்த புஷ்கரம் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதால் காவிரி மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது.

காவிரி நதியின் ராசி துலாம் ராசியாக இருப்பதாலும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மகா புஷ்கரம் வருவதாலும் காவிரி பாயும் எல்லா இடங்களிலும்் இந்த புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது.

மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் அருகே உள்ள மாமுண்டி கோனார் திடலில் கடந்த 24-ந் தேதி யாகசாலை பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. அங்கு யாகசாலை மற்றும் விழா மேடை அமைக்கப்பட்டது.

நேற்று காலை யாகசாலையில் வாஸ்து பூஜை நடைபெற்றது. பின்னர் மாலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரங்கா, ரங்கா கோபுரத்தில் இருந்து ஆதிநாகப்பெருமாள், தாயாருடன் ஆன்மிக ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்்வலத்தை ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர், ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோபராமானுஜ ஜீயர், மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஊர்வலம் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து ராஜகோபுரம் வழியாக அம்மாமண்டபம் அருகில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் உள்ள யாகசாலைக்கு வந்தடைந்தது. ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி வந்தனர்.

இன்று தொடங்குகிறது

காவிரி புஷ்கரம் விழாவின் தொடக்க நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 6.45 மணிக்கு ஜீயர் சுவாமிகள் மற்றும் வேத விற்பன்னர்கள் காவிரியாற்றில் நீராடி புனிதநீரை எடுத்துக்கொண்டு யாகசாலையை வந்தடைகின்றனர். பின்னர் 8 மணியளவில் கோபூஜை நடைபெறு கிறது. 9.15 மணி முதல் விஷ்வக்சேன இஷ்டி யாகம் தொடங்கு கிறது.

விழாவையொட்டி தினமும் காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் பலவகையான யாகங்களை நடத்த உள்ளனர். அதன் பின்னர் தினமும்் மாலை 6 மணிக்கு காவிரி தாய்க்கு மங்கள ஆரத்தி சமர்ப்பிக்கப்பட உள்ளது. விழா நடைபெறும் நாட்களில் ஜீயர்கள் மற்றும் மகான்களின் ஆசிஉரைகளும், பல்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய வைணவ மடாதிபதிகள், ஜீயர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவையொட்டி நேற்று ஸ்ரீரங்கத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். விழாவை சிறப்பாக கொண்டாட மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


Related Tags :
Next Story