திருப்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு


திருப்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு
x
தினத்தந்தி 12 Sept 2017 4:15 AM IST (Updated: 12 Sept 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக செத்தனர்.

திருப்பத்தூர்,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிம்மணபுதூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் முருகதாஸ். இவருடைய மகன் ஈஸ்வரன் (வயது 7). அதே பகுதியை சேர்ந்தவர் பிரபு மகன் சுரேஷ் (5). முருகதாஸ், பிரபு ஆகிய 2 பேரும் கூலி தொழிலாளிகள்.

இவர்களது மகன்கள் ஈஸ்வரன், சுரேஷ் ஆகிய 2 பேரும் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு, 1-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று மாலை 4 மணிக்கு பள்ளி முடிந்ததும் ஈஸ்வரனும், சுரேசும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வழியில் ஓட்டேரி என்ற ஏரியில் தண்ணீர் தேங்கியிருந்தது. அதனை பார்த்ததும் சிறுவர்கள் 2 பேருக்கும் குளிக்கலாம் என ஆசை வந்தது.

தங்களது புத்தக பையை ஏரிக்கரையில் வைத்துவிட்டு, ஈஸ்வரனும், சுரேசும் தண்ணீரில் இறங்கினர். சற்று ஆழமான பகுதிக்கு சென்ற போது, ஈஸ்வரன், சுரேசின் கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டது.

நீச்சல் தெரியாத காரணத்தினால் சிறுவர்களால் மீண்டு வர முடியவில்லை. சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு ஈஸ்வரன், சுரேஷ் ஆகிய 2 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

வெகுநேரம் ஆகியும் சிறுவர்கள் வராத காரணத்தினால், அவர்களது பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஏரிக்கரையில் அவர்களின் புத்தக பையை பார்த்ததும், பெற்றோர், உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் ஏரியில் மூழ்கி தேடி பார்த்து, ஈஸ்வரனையும், சுரேசையும் பிணமாக மீட்டனர்.

சிறுவர்களை இழந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே கிராமத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story