வாணியம்பாடி பாலாற்றில் கழிவுநீர் கலப்பு 132 தோல் தொழிற்சாலைகளை மூட உத்தரவு


வாணியம்பாடி பாலாற்றில் கழிவுநீர் கலப்பு 132 தோல் தொழிற்சாலைகளை மூட உத்தரவு
x
தினத்தந்தி 12 Sept 2017 4:30 AM IST (Updated: 12 Sept 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தையடுத்து வாணியம்பாடி பகுதியில் உள்ள 132 தோல் தொழிற்சாலைகளை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

வாணியம்பாடி,

வாணியம்பாடி கச்சேரி ரோடு, உதயேந்திரம், சீவிபட்டறை பகுதியில் 132 தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டதால் நிலத்தடி நீர் மாசுபட்டு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. இதனையடுத்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் வாணியம்பாடி வளையாம்பட்டு பகுதியில் பாலாற்றின் அருகே ‘வாணிடெக்’ என்ற பெயரில் தோல் தொழிற்சாலைகள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

இங்கு பிரமாண்ட தொட்டிகள் கட்டப்பட்டு 132 தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரும் கொண்டு வரப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுத்திகரிப்பு நிலையத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கி தோல் தொழிற்சாலை கழிவுநீருடன் கலந்தது. அந்த கழிவுநீர் பாலாற்றில் கலக்கிறது. தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தோல் தொழிற்சாலை கழிவுநீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

இதனை கண்டித்து நேற்று முன்தினம் இரவு வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ‘வாணிடெக்’ தோல் தொழிற்சாலை சுத்திகரிப்பு நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிகாரிகள் அவர்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து நேற்று காலை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பன்னீர்செல்வம், தாசில்தார் முரளிகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது கழிவுநீர் தேங்கி பாலாற்றில் கலப்பதை உறுதி செய்தனர். இதனால் அவர்கள் சுத்திகரிப்பு நிலையத்தின் தொட்டியை மேலும் 5 அடி உயர்த்தி கட்ட வேண்டும் என்றும் அதுவரை 132 தோல் தொழிற்சாலைகளையும் மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

Related Tags :
Next Story