டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை


டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 12 Sept 2017 4:30 AM IST (Updated: 12 Sept 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

வந்தவாசியில் டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வந்தவாசி,

வந்தவாசியில் பஜார் வீதியையொட்டி பள்ளப்பகுதி என்ற இடம் உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி பள்ளி, மசூதி ஆகியவை உள்ளன. இந்த பள்ளப்பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை கடந்த சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் அதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. கடை திறக்கப்பட்டதை அறிந்த ‘குடி’மகன்கள் கும்பல் கும்பலாக சென்று மதுபானங்களை வாங்கி குடித்து வருகின்றனர்.

இதனால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், வியாபாரிகளுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் இடையூறு ஏற்படும் என்று கூறி அந்த பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் நேற்று கடை திறக்கப்படுவதற்கு முன்பாக காலை 11.30 மணியளவில் அந்த கடையை முற்றுகையிட்டனர். அவர்கள் கடையின் படிக்கட்டுகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் அப்துல்கறீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால், சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று டாஸ்மாக் கடையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் சமரசப்பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

“உங்களுடைய கோரிக்கைகளை வருவாய் துறையினரிடம் மனுவாக கொடுங்கள், இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினர். இதனை ஏற்ற பொதுமக்கள் மதியம் 12.45 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story