நவல்பட்டு கிராமத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு


நவல்பட்டு கிராமத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 12 Sept 2017 4:30 AM IST (Updated: 12 Sept 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

நவல்பட்டு கிராமத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். இதில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா நவல்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தை சேர்ந்த பெரும்பாலானவர்கள் தலைமுறை, தலைமுறையாக விவசாயத்தையும், அதன் சார்பு தொழில்களையும் செய்து வாழ்ந்து வருகிறோம். அங்கு அதிக அளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்தநிலையில் எங்கள் கிராமத்தை மாநகராட்சியுடன் இணைத்தால் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விடும். மேலும், எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்பை பெற்று ஜீவாதாரத்தை ஓரளவுக்கு சமாளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் எங்கள் கிராமத்தை மாநகராட்சியுடன் இணைத்தால் ஏரி, குளம், குட்டைகளில் கழிவுநீர் தேங்கி சீரழிவு ஏற்பட்டுவிடும். ஆகவே பூர்வீக நவல்பட்டு கிராமத்தை மாநகராட்சியுடன் இணைக்காமல் ஊராட்சியாகவே இயங்க அனுமதித்து விவசாயத்தையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

முசிறி மாவலிப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனுக்களை மாலையாக போட்டு கொண்டு வந்தார். அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் தொகுப்பு வீடுகளுக்கு செல்ல முடியாமல் உள்ளது. ஆகவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்” என்றார். இது குறித்து அவர் கூறுகையில், “ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற எனது கோரிக்கை குறித்து பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தான் இதுவரை நான் கொடுத்த மனுக்களை மாலையாக போட்டு வந்தேன்” என்றார்.

அகில இந்திய மஜ்லீஸ் கட்சி மாவட்ட தலைவர் சம்சுதீன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “அரியமங்கலம் குப்பை கிடங்கு அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. மாவட்ட கலெக்டர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.


Next Story