போலீஸ் வேலைக்கு தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு


போலீஸ் வேலைக்கு தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
x
தினத்தந்தி 12 Sept 2017 4:15 AM IST (Updated: 12 Sept 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களது சான்றிதழ் நேற்று சரிபார்க்கப்பட்டது.

நெல்லை,

தமிழ்நாடு போலீஸ், தீயணைப்பு துறை, சிறைத்துறையில் பணிபுரிவதற்கு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் எழுத்து தேர்வு நடைபெற்றது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய தேர்வில் 80 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு கடந்த மாதம் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது.

இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பாளையங்கோட்டை தனியார் கல்லூரியில் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உடல் தகுதி தேர்வானவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று நடைபெற்றது.

இதில் நெல்லை மாநகரத்தை சேர்ந்தவர்களுக்கு பாளையங்கோட்டையில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்திலும், நெல்லை புறநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திலும் நேற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

நெல்லை மாநகரை சேர்ந்த 164 பேர், புறநகர் மாவட்டத்தை சேர்ந்த 586 பேர் என மொத்தம் 750 பேர் இதில் கலந்து கொண்டனர். அவர்களது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டதோடு, அனைவரது கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஏதேனும் குற்ற பின்னணி உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த பணியை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் நேரடியாக ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். பின்னர் போலீஸ் துறை 2-ம் நிலை போலீசார், சிறைத்துறை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் தேர்வு விவரம் அறிவிக்கப்படும். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story