கடலூரில் சிதம்பரம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்
சிதம்பரம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கடலூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கடலூர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி செயல்படுகிறது. கடந்த 2013–ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு கையகப்படுத்தியது. இந்த பல்கலைக்கழகம் அரசால் கையகப்படுத்தப்பட்ட போதிலும் அதன் கீழுள்ள ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரியில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக பலமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை வசூலிக்கக்கோரியும் கடந்த 12 நாட்களாக மருத்துவ மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன்காரணமாக கல்லூரி நிர்வாகம் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர்த்து காலவரையற்ற விடுமுறையை அறிவித்திருந்தது. பின்னர், நேற்று முதல் வழக்கம்போல வகுப்புகள் நடைபெறும் என்று அறிவித்தது. ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் தங்களது கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்தது. இவர்களது போராட்டம் நேற்று 13–வது நாளாக நீடித்தது.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒரு குழுவினர் நேற்று கடலூருக்கு வந்து பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது மாணவர்களின் போராட்டத்தை வாழ்த்தி கடலூர் அரசு கல்லூரி மாணவர் பேரவை முன்னாள் தலைவர் வாஞ்சி நாதன் பேசினார்.
இந்த போராட்டத்துக்கு பின்னர் மாணவர்களில் 5 பேர் மட்டும் புதிய கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேயை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதற்கிடையே மருத்துவ கல்லூரி வளாகத்தில் வழக்கம்போல மாணவர்களின் மற்றொரு குழுவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் கல்லூரி முதல்வர் அறையை முற்றுகையிட்டு, அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும், இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து கல்லூரி பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அவர்கள் மதியம் தங்களது போராட்டத்தை நடத்திவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஒரே நாளில் மாணவர்கள் 2 குழுக்களாக கடலூர், சிதம்பரத்தில் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.