திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஜாக்டோ, ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஜாக்டோ, ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக பங்கேற்றனர்.
திண்டுக்கல்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும். 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவான ஜாக்டோ, ஜியோ சார்பில் இந்த போராட்டம் நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்திலும் கணிசமான அளவில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ளனர். நேற்று, ஜாக்டோ, ஜியோ சார்பில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அந்த அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள் சுகந்தி, ஜேம்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த பலரும் கலந்துகொண்டு பேசினர். அப்போது, தமிழக அரசு மீது அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினர். மேலும், உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறும்போது, ‘எங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காத பட்சத்தில் நாளை (இன்று) மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம். அதன்பிறகு, தொடர்ச்சியாக கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அங்கேயே சமையல் செய்து தங்குவோம். போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு பெருகுகிறது. ஒதுங்கி நின்ற பல்வேறு சங்கங்களும் தற்போது ஆதரவு கரம் நீட்டி போராட்டத்தில் கலந்துகொள்ள தொடங்கி இருக்கின்றன. இதனால் வருகிற நாட்களில் போராட்டம் வலுவடையத்தான் செய்யும்’ என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். இது வழக்கமான ஆர்ப்பாட்டத்தை போல் இன்றி உள்ளிருப்பு போராட்டம் போல நடந்தது. இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காட்சி அளித்தது. இதையொட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சிகாமணி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது. ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் பங்கேற்று இருப்பதால் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. எனினும், அறிவித்தபடி நேற்று காலாண்டு தேர்வு தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வை எழுதினர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் கூறும்போது, ‘குறைந்த அளவிலான ஆசிரியர்களே போராட்டத்தில் பங்கேற்று இருப்பதால் எந்த பாதிப்புகளும் இன்றி தேர்வு நடந்தது. தொடர்ந்து பாதிப்பின்றி தேர்வு நடத்தப்படும்’ என்றார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் வருவாய்த்துறையை சேர்ந்த 342 பேர், ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த 527 பேர், சத்துணவு ஊழியர்கள் 1,539 பேர், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 177 பேர், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 1,297 பேர் உள்பட 4 ஆயிரத்து 439 பேர் பணிக்கு செல்லவில்லை. இதுபோக 334 பேர் அதிகாரப்பூர்வமான விடுப்பில் இருந்தனர். மொத்தம் 18 ஆயிரத்து 78 பேர் போராட்டத்தில் பங்கேற்காமல் பணிக்கு வந்திருந்தனர். அதாவது, 19 சதவீதம் பேர் பணிக்கு செல்லவில்லை.