மிளகாய் பொடியை முகத்தில் தூவி மதுக்கடை ஊழியரை தாக்கி கொள்ளை முயற்சி
வேடசந்தூர் அருகே மிளகாய் பொடியை முகத்தில் தூவி மதுபான கடை ஊழியரின் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே உள்ள காக்காத்தோப்பை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). இவர், சாலையூர் நால்ரோடு கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் இந்த மதுபான கடை செயல்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு, தனது உறவினரான யுவராஜ் என்பவருடன் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் பாலமுருகன் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை பாலமுருகன் ஓட்டினார். பின்னால் யுவராஜ் அமர்ந்திருந்தார். கடையின் அருகே இடையகோட்டை செல்லும் பிரிவில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே 2 மோட்டார் சைக்கிள்களில் தலா 3 பேர் வீதம் வந்தனர். திடீரென அவர்கள், பாலமுருகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த மிளகாய் பொடியை பாலமுருகன், யுவராஜ் ஆகியோரின் முகத்தில் தூவினர். மேலும் அவர்களின் தலையில் அரிவாளால் வெட்டினர். உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
மேலும் யுவராஜ் வைத்திருந்த கைப்பையை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிள்களிலேயே அவர்கள் தப்பி சென்று விட்டனர். அந்த பையில் பணம் எதுவும் இல்லை. மதுபான கடையின் கணக்கு நோட்டு மற்றும் டிபன்பாக்ஸ் ஆகியவை மட்டுமே இருந்தது.
இதற்கிடையே படுகாயம் அடைந்த பாலமுருகன், யுவராஜ் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாலமுருகன் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குப்பதிவு செய்து, 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றார். கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதுபானம் விற்பனையான தொகை ரூ.3 லட்சத்தை கடைக்குள்ளேயே வைத்து பாலமுருகன் பூட்டி சென்று விட்டார். இதனால் அந்த பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது.