பரமத்திவேலூர் அருகே இடிந்து விழும் நிலையில் தொடக்கப்பள்ளி கட்டிடம்


பரமத்திவேலூர் அருகே இடிந்து விழும் நிலையில் தொடக்கப்பள்ளி கட்டிடம்
x
தினத்தந்தி 12 Sept 2017 4:15 AM IST (Updated: 12 Sept 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே இடிந்து விழும் நிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் உள்ளது. 4-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் மரத்தடியில் உட்கார்ந்து பாடம் படிக்கிறார்கள்.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் மிகவும் பழமைவாய்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

இந்த கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியானது 1909-ம் ஆண்டு கட்டப்பட்டது. பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. 98 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 2 கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களில் 5 வகுப்பறைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வகுப்பறைகளை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு செய்யப்பட்டது. தற்போது 5 வகுப்பறைகளும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் அடிக்கடி மழை நீர் வகுப்பறைக்குள் புகுந்து விடுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் 4-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

இப்பள்ளி 100 ஆண்டுகளை கடந்த நிலையில் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பெரும் விபத்து ஏற்படும் முன்பு போர்க்கால அடிப்படையில் கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story