சம்பளம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் ஊர்வலம்–ஆர்ப்பாட்டம்


சம்பளம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் ஊர்வலம்–ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2017 4:30 AM IST (Updated: 12 Sept 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

சம்பளம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

ஊழியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் தொடர்ந்து ஊதியம் வழங்கிட வேண்டும், தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே தொடர்ந்து பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் 9 ஊழியர்கள் மனஉளைச்சலால் இறந்துபோனதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், தொடர் போராட்டத்தின் ஒருபகுதியாகவும் நேற்று பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி அவர்கள் நேற்று பெரியார் சிலையருகே கூடினார்கள். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தின்போது இறந்துபோன பாசிக் ஊழியர்களின் படங்கள் அடங்கிய பேனரை எடுத்து வந்தனர்.

மேலும் அவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தும் விதமாக மலர் வளையத்தையும் எடுத்து வந்தனர். ஊர்வலம் தாரை தப்பட்டை முழங்க புறப்பட்டது. ஊர்வலத்துக்கு சங்க செயலாளர் முத்துராமன் தலைமை தாங்கினார். தலைவர் அப்துல்லாகான் முன்னிலை வகித்தார்.

ஊர்வலத்தை ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் அபிசேகம் தொடங்கிவைத்தார். பொதுச்செயலாளர் தினேஷ் பொன்னையா, செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். ஊர்வலம் காமராஜ் சாலை, நேரு வீதி, மி‌ஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தது. அதற்கு மேல் செல்ல அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய ஊழியர்கள் மறைந்த ஊழியர்களின் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த ஊர்வலம்–ஆர்ப்பாட்டத்தில் பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க துணைத்தலைவர் ரமேஷ், துணை செயலாளர் கோவிந்தராசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story