ரூ.2 ஆயிரம் திருடியதாக பெண் எரித்துக்கொலை கணவர், மாமியார் கைது
கலபுரகி அருகே திருமணமான 8 மாதத்தில், ரூ.2 ஆயிரம் திருடியதாக கூறி பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண்ணின் கணவர், மாமியாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலபுரகி,
கலபுரகி மாவட்டம் கமலாபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் தாராசிங் சவுகான். கூலித் தொழிலாளி. இவரது மனைவி பூஜா(வயது 21). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தாராசிங்குடன், அவரது தாய் கோமளா பாயும் வசித்து வருகிறார். திருமணமான நாளில் இருந்தே தாராசிங், பூஜா இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல, கடந்த 6-ந் தேதி இரவும் கணவன், மனைவி இடையே சண்டை உண்டானது.
அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த தாராசிங் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து பூஜாவின் உடலில் ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே தாராசிங், அவரது தாய் கோமளா பாய் ஆகியோர் தப்பி ஓடிவிட்டார்கள். பின்னர் அக்கம் பக்கத்தினர் பூஜாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பூஜா பரிதாபமாக இறந்து விட்டார்.
ரூ.2 ஆயிரம் திருடியதாக கூறி...
போலீஸ் விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக தாராசிங்கும், அவரது மனைவி பூஜாவும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். பின்னர் கடந்த 6-ந் தேதி தாராசிங் வீட்டில் வைத்திருந்த ரூ.2 ஆயிரம் காணாமல் போய் உள்ளது. அந்த பணத்தை பூஜா தான் திருடி விட்டதாக தாராசிங்கும், அவரது தாய் கோமளா பாயும் கூறியுள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் பூஜாவை தாராசிங்கும், அவரது தாயும் சேர்ந்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்து உள்ளது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த தாராசிங், கோமளா பாயை கமலாபுரா போலீசார் கைது செய்தார்கள். அவர்கள் மீது கமலாபுரா போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story