மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள்–பஸ் மோதல்; எலக்ட்ரீஷியன் பலி


மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள்–பஸ் மோதல்; எலக்ட்ரீஷியன் பலி
x
தினத்தந்தி 12 Sept 2017 5:00 AM IST (Updated: 12 Sept 2017 3:41 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் எலக்ட்ரீஷியன் பரிதாபமாக இறந்தார். அவருடைய 2 நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம். இவருடைய மகன் முரளி(வயது 23). எலக்ட்ரீஷியன். இவர் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த அவருடைய நண்பர்களான விக்னேஷ், வல்லரசு ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் நேத்தப்பாக்கத்தில் இருந்து சித்தாமூருக்கு சென்றனர்.

மதுராந்தகம் அடுத்த பொலம்பாக்கம் அருகே சென்ற போது எதிரே புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், 3 பேரையும் மீட்டு மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை முரளி பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர்களான விக்னேஷ், வல்லரசு இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சித்தாமூர் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன்(பொறுப்பு) பலியான முரளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இது குறித்து சித்தாமூர் சப்–இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story