எழும்பூரில் ரெயில் என்ஜின் தடம் புரண்டது


எழும்பூரில் ரெயில் என்ஜின் தடம் புரண்டது
x
தினத்தந்தி 12 Sept 2017 5:15 AM IST (Updated: 12 Sept 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின் தடம்புரண்டது. இதனால் புதுச்சேரி பயணிகள் ரெயில் தாமதமாக சென்னைக்கு வந்தது.

சென்னை,

சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள சரக்கு பாதுகாப்பு பிரிவுக்கு 4 பெட்டிகளுடன் கூடிய சரக்கு ரெயில் நேற்று காலை புறப்பட்டு வந்தது. பின்பு சரக்கு பெட்டிகளை நிறுத்திவிட்டு, ரெயில் என்ஜின் மட்டும் எழும்பூர் ரெயில் நிலையத்தின் 1–வது நடைமேடை வழியாக பேசின்பிரிட்ஜ் பணிமனைக்கு புறப்பட்டது.

ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதாவது சரக்கு பாதுகாப்பு பிரிவில் இருந்து 400 மீட்டர் தொலைவிலேயே அந்த என்ஜின் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. என்ஜினின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. உடனடியாக என்ஜினை நிறுத்திய டிரைவர், இதுபற்றி எழும்பூர் ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி, தடத்தில் இருந்து விலகியிருந்த ரெயில் என்ஜின் சக்கரங்களை மீண்டும், தண்டவாளத்தில் நிறுத்தினர். பின்பு அந்த என்ஜின் அங்கு இருந்து பேசின்பிரிட்ஜ் பணிமனைக்கு புறப்பட்டு சென்றது.

ரெயில் என்ஜின் தடம்புரண்ட 1–வது நடைமேடைக்கு புதுச்சேரி பயணிகள் ரெயில் மட்டுமே வந்து செல்லும். இந்த சம்பவத்தால் நேற்று காலை அந்த நடைமேடைக்கு புதுச்சேரியில் வரவேண்டிய பயணிகள் ரெயில் காலதாமதமாக 5–வது நடைமேடைக்கு வந்து சேர்ந்தது.


Next Story