பழனியில் சண்முக நதியில் முதலை நடமாட்டம் பக்தர்கள் குளிக்க தடை


பழனியில் சண்முக நதியில் முதலை நடமாட்டம் பக்தர்கள் குளிக்க தடை
x
தினத்தந்தி 12 Sept 2017 1:00 PM IST (Updated: 12 Sept 2017 11:56 AM IST)
t-max-icont-min-icon

பழனி சண்முக நதியில் முதலை நடமாடுவதால் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழனி,

பழனி முருகன் கோவிலுக்கு உட்பட்ட பெரியஆவுடையார் கோவில் அருகே சண்முக நதி உள்ளது. புண்ணிய நதியாக கருதப்படும் இங்கு பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக வருகிற பக்தர்கள் புனித நீராடி செல்வார்கள். கடந்த ஆண்டு, இந்த நதியில் முதலை நடமாட்டம் இருந்தது. இதனால் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும் முதலையை பிடிக்க திருமூர்த்தி அணை அருகே உள்ள முதலை பண்ணையில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டனர். இறைச்சிகள் வைத்து முதலையை பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது பலன் அளிக்கவில்லை. இதனால் முதலையை பிடிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக சண்முகநதி தண்ணீர் இன்றி வறண்டது. தற்போது பழனி பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சண்முக நதிக்கு நீர்வரத்து ஏற்பட்டது. தற்போது சண்முக நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்தநிலையில் நேற்று சண்முக நதியில் ஒரு முதலை இருப்பதை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஒரு கல்லில் முதலை படுத்து இருந்ததாக அவர்கள் கூறினர். இது தொடர்பாக பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.ஆனால் அவர்கள் வருவதற்குள் கல்லில் இருந்த முதலை, தண்ணீருக்குள் சென்று விட்டது. இருப்பினும் முதலையை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். முதலையை பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். தற்போது தொடர்மழை பெய்து வருவதால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் கரைக்கு வராமல் தண்ணீருக்குள்ளேயே முதலை மறைந்து விடுகிறது. இதற்கிடையே முதலையினால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக பெரிய ஆவுடையார் கோவில் அருகே சண்முகநதியில் குளிக்க பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Next Story