பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் சாலை மறியல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி தஞ்சையில் தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் 1,600 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்றவற்றை ஒழித்துவிட்டு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோர்ட்டு விதித்த தடையை மீறி தஞ்சை மாவட்டத்தில் 7–ந் தேதி முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள்– ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 7 ஆயிரத்து 405 பேர் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலானோர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திடீரென தஞ்சை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதற்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ரெங்கசாமி, இளையராஜா ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றன. உடனே மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்துவிட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து பஸ், வேன்களில் ஏற்றி சென்றனர். மொத்தம் 400 பெண்கள் உள்பட 1,600 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மறியலால் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.