ராணுவப்பணிக்கு மகன்களை அனுப்பிய பெற்றோர்களுக்கு ஊக்க மானிய தொகை
ஒரே மகன் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மகன்களை இந்திய ராணுவ பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு ஊக்க மானிய தொகையினை மாவட்ட கலெக்டர் நடராஜன் வழங்கினார்.
ராமநாதபுரம்,
இந்திய ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் படைவீரர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாதந்தோறும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் முன்னாள் படைவீரர்கள் நல சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து ஒரே மகன், ஒன்றுக்கு மேற்பட்ட மகன்களை ராணுவப் பணிக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு ஊக்க மானிய தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 15 பேருக்கு மொத்தம் ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர்கள் நல துணை இயக்குனர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.