கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை அகற்றும் வேலையை தொடங்கி விட்டேன்: டி.டி.வி.தினகரன் பேட்டி
கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கலைக்கும் வேலையை தொடங்கி விட்டேன் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
மதுரை,
அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சென்னையில் எடப்பாடி அணியினர் நேற்று நடத்தியது பொதுக்குழு கூட்டமே அல்ல. பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு மட்டுமே உண்டு.
சசிகலாவை இவர்கள் தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்தார்கள். அதன் பிறகு அவர் சிறைக்கு சென்றதும் ஒரு மாதம் கூட பொறுக்காமல் இவர்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தார்கள்.
ஜெயலலிதா இருந்த இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்க்க முடியவில்லை என்று கூறும் இவர்கள் இன்று முன்வரிசையில் அவர் இருந்த இடத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அமர்ந்து இருக்கிறார்கள். இப்போது நடப்பது அம்மா ஆட்சி அல்ல. பழனிசாமி அண்ட் கம்பெனி ஆட்சி தான்.
துரோகமும் துரோகமும் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்துகின்றன. இவர்கள் போடும் தீர்மானங்கள் செல்லுமா செல்லாதா என்பதை ஐகோர்ட்டு தான் முடிவு செய்யும்.
நாங்கள் அம்மாவின் வழியில் செயல்படுகிறோம். எங்களால் அம்மா இருந்த இடத்தில் ஓ.பி.எஸ்.சையும், இ.பி.எஸ்.சையும் வைத்துப்பார்க்க முடியவில்லை.
கழகத்தையும் அதன் 1½ கோடி தொண்டர்களையும் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள், “இந்த ஆட்சியை அகற்றுங்கள். அம்மா ஆட்சியை கொண்டு வாருங்கள்“ என்று தான் கூறுகிறார்கள்.
இரட்டை இலையை முடக்கியது ஓ.பன்னீர்செல்வம் தான். தற்போது அவரே சின்னதை மீட்கப்போவதாக தீர்மானம் நிறைவேற்றுகிறார். நடந்தது பொதுக்கூட்டம் தான்; பொதுக்குழு கூட்டம் அல்ல.
21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எனக்கு உள்ளது. எனவே தற்போதைய அரசுக்கு பெரும்பான்மை இல்லை. இந்த ஆட்சியை அகற்றுவதற்கான வேலையை தொடங்கி விட்டேன். இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது.
அடுத்து, தேர்தலில் போட்டியிட்டால் அமைச்சர்கள் கூட டெபாசிட்டை இழப்பார்கள். கட்சி எங்களிடம் இருக்கிறது என்கிறார்கள். அப்படியானால் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்தியுங்கள் பார்ப்போம்.
நீங்களும் வேட்பாளர்களை நிறுத்துங்கள், நாங்களும் வேட்பாளர்களை நிறுத்துகிறோம். யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை பார்த்து விடலாம்.
பதவி போய் விட்டால் என்ன செய்ய முடியும் என்ற மனநிலையில் பலர் அங்கே ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள். பதவி போய் விட்டால் அனைவரும் எங்கள் பக்கம் வந்து விடுவார்கள்.
போதிய மெஜாரிட்டியை இழந்து விட்ட நிலையில் நீங்களே தார்மீக பொறுப்பு ஏற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அதன் பிறகு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி முதல்–அமைச்சரை தேர்வு செய்ய வேண்டும். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டேன். இந்த ஆட்சிக்கு மெஜாரிட்டி இல்லை என்பது ஊரறிந்த விஷயம்.
மெஜாரிட்டி இழந்த அரசு மீது நடவடிக்கை எடுக்க கவர்னருக்கு உரிமை உள்ளது. சட்டசபையை கூட்ட சபாநாயகருக்கு அவர் உத்தரவிடலாம். பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கும் உத்தரவிடலாம். ஆனால் கவர்னரிடம் இருந்து இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் கவர்னர் பதவி மீது இருந்த நம்பிக்கை கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது.
3 வார காலம் பொறுமையாக காத்து இருந்தோம். இனி இந்த ஆட்சி தொடரக்கூடாது. இதற்கு கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன் என்ற ஒரே காரணத்தால் தான் ஆட்சி தொடரக்கூடாது என்று கூறுகிறேன்.
பொதுக்குழுவை கூட்டவே அதிகாரம் இல்லை. அப்படி இருக்கும் போது கட்சியில் இருந்து யாரையும் நீக்குவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் இல்லை.
இன்னும் 2 நாட்கள் பொறுத்து இருப்போம். கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்.
தேர்தல் வந்தால் எங்களுக்கும், தி.மு.க.விற்கும் தான் போட்டி ஏற்படும். அம்மாவின் உண்மை விசுவாசிகள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர். ஆனால் தி.மு.க.வுடன் சேர்ந்து அம்மாவின் ஆட்சியை முடக்க நினைத்த ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி கைகோர்த்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை முதல்–அமைச்சர் பதவியில் அமர்த்தியவரே சசிகலா தான். ஆனால் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, வீரமணி, பெஞ்சமின் உள்பட 5 அமைச்சர்களும், செம்மலை உள்பட சில எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராவதை விரும்பாமல் வெளியேற நினைத்தனர். அவர்களை நான் தான் தடுத்து நிறுத்தினேன்.
இனி இந்த ஆட்சி நீடித்தால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடும். எனவே இந்த ஆட்சியை அகற்றும் வேலையை தொடங்கி விட்டேன்.
இவ்வாறு தினகரன் கூறினார்.