ஐகோர்ட்டு உத்தரவு கீழடியில் மத்திய–மாநில அரசு வக்கீல்கள் ஆய்வு செய்ய வேண்டும்
மதுரை அருகே கீழடியில் அகழாய்வு பணிகளின்போது கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கக்கோரி வக்கீல் கனிமொழிமதி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மதுரை,
மதுரை அருகே கீழடியில் அகழாய்வு பணிகளின்போது கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கக்கோரி சென்னையை சேர்ந்த வக்கீல் கனிமொழிமதி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், "கீழடியில் அகழாய்வை மத்திய தொல்லியல் துறையின் ஒரு பிரிவு மேற்கொள்கிறது. அதற்கான ஒப்பந்தகாலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. அகழாய்வை தொடர்வதற்கான ஒப்பந்த உரிமம் வழங்கக் கோரி தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. தகுதி இருக்கும்பட்சத்தில் உரிமம் வழங்குவது குறித்து அகில இந்திய தொல்லியல் குழு தான் முடிவு செய்யும். கீழடியில் அகழாய்வு அதிகாரியாக அமர்நாத்ராமகிருஷ்ணன் இருந்தபோது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து அவரே இங்கு வந்து அறிக்கை தயார் செய்யலாம். இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு எடுக்கப்பட்ட பழமையான பொருட்கள் பற்றிய தகவல் தொல்லியல் துறை இணையதளத்தில் வெளியிடப்படும்" என்றார்.
இதனையடுத்து, "கீழடியில் எடுக்கப்பட்ட பழமையான பொருட்களை பாதுகாக்க வேண்டும் என்று மனுதாரரும், பொதுமக்களும் அக்கறையுடன் உள்ளனர். எனவே அங்கு அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை மாநில அரசு வக்கீல், மத்திய அரசு வக்கீல் ஆகியோர் ஆய்வு செய்து வருகிற 18–ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.