தேனி கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் சாலை மறியல்
தேனி கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,006 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு சார்பில் கடந்த 7–ந்தேதியில் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டத்துக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ள போதிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் செய்தனர். நேற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கூறி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குவிந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து கோஷங்கள் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
அதன்படி, 754 பெண்கள் உள்பட மொத்தம் 1,006 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் வேன்களிலும், மினிபஸ்களில் ஏற்றப்பட்டு, தேனியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தேனி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தேனி கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது, ஆசிரியர்கள் சிலர், தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் புகைப்படத்தையும், நீட் தேர்வு குறித்து மாணவி அனிதா கூறிய கருத்துக்கள் அடங்கிய பதாகைகளையும் கையில் தூக்கிக் கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
தேனியில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் செய்தனர். மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் அழைத்துச் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திடீரென மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணதேவேந்திரன், போராட்டம் நடத்தியவர்களை தரக்குறைவாக பேசியதாக கூறி அவர்கள் இந்த சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியல் செய்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே, இந்த போராட்டத்தின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள், போலீசாரையும் இன்ஸ்பெக்டர் சரவணதேவேந்திரன் மரியாதை குறைவாக பேசியதாக வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனை நேரில் சந்தித்து, இன்ஸ்பெக்டர் சரவணதேவேந்திரன் மீது புகார் செய்தனர். இதையடுத்து அவரை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேரில் அழைத்து விசாரணை நடத்தி, அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தார்.