கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,943 பேர் கைது


கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,943 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sept 2017 4:30 AM IST (Updated: 13 Sept 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,943 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்,

தமிழகம் முழுவதும் ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய முறையை செயல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறார்கள். நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

இதையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நேற்று காலை 10 மணி முதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிய தொடங்கினர். பிறகு, பேரணியாக கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலுக்கு சென்றனர். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஒருங்கிணைப்பாளர் குன்வர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன், முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள் தங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதன்பிறகு, மாநில நிதி காப்பாளர் மோசஸ் மறியல் போராட்டத்தை தொடங்கிவைத்தார்.

இதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையொட்டி, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். 1,071 பெண்கள் உள்பட 1,943 பேர் கைதானார்கள். அவர்களை போலீஸ் வாகனம் மற்றும் அரசு பஸ்களில் ஏற்றி தனியார் மகாலில் தங்கவைத்தனர்.

இதற்கிடையே, நேற்று பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகம் தயார் செய்தது. அதன்படி, வருவாய்த்துறையில் 351 பேர், ஊரக வளர்ச்சித்துறையில் 515 பேர், வேளாண்மை துறையில் 73 பேர், சத்துணவு ஊழியர்கள் 1,467 பேர், கல்வித்துறையில் 2 ஆயிரத்து 36 பேர் உள்பட 4 ஆயிரத்து 720 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 439 ஆக இருந்தது. நேற்று மட்டும் கூடுதலாக 281 பேர் பணிக்கு செல்லவில்லை. மறியலில் ஈடுபட்டு கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மறியல் போராட்டம் தொடங்கியதும் போலீசார் கைது நடவடிக்கையை தொடங்கினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்ற தாமதமானது. இதற்கிடையே, போலீசார் கைது செய்ய தொடங்கியதும் போராட்டத்துக்கு வந்திருந்த 100–க்கும் மேற்பட்டோர் திடீரென ஓட்டம் பிடித்தனர். அவர்கள் பின்புறமாக தாங்கள் வந்த வாகனங்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். சிலர் கைதானவர்கள் தங்கவைக்கப்பட்ட மகாலுக்கு சென்றனர்.

4 ஆயிரத்துக்கு அதிகமானோர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற போதிலும் களத்துக்கு போராட வந்து கைதானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைதான் நெருங்கியது. பாதிக்கும் மேற்பட்டோர் களத்துக்கு வராமல், வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து ஆதரவு கொடுத்தனர்.

7–ந்தேதியில் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தின்போது, தங்களுடைய பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்புவதை வாடிக்கையாக வைத்து உள்ளனர். அனிதாவின் மரணம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நேற்றைய போராட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டக்காரர்கள் முன்வைத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர்.


Next Story