நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கைது: விடுதலையான 47 பேர் சிறை முன்பு ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கைது: விடுதலையான 47 பேர் சிறை முன்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2017 6:30 AM IST (Updated: 13 Sept 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கைதாகி விடுதலையான 47 பேர் திண்டுக்கல் சிறை முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. குறிப்பாக, மாணவ, மாணவிகள் களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள். கடந்த 7–ந்தேதி, மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இதில், 5 பெண்கள் உள்பட மொத்தம் 81 பேர் கைதானார்கள். அவர்கள் அனைவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, பெண்கள் தவிர மற்ற 76 பேர் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 47 பேருக்கு ஜாமீன் கிடைத்தது. இதற்கான உத்தரவு நகல் திண்டுக்கல் மாவட்ட சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணி அளவில் 47 பேரும் விடுவிக்கப்பட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்த அவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறைச்சாலை முன்பு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அனைவரும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மனுவேல் நிருபர்களிடம் கூறும்போது, ‘எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 18–ந்தேதி மதுரையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. இதில் திரளானோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்’ என்றார்.

இதே போல நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட துணை தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தின்போது, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அனிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் கலந்துகொண்ட சிலர் கண்களில் கருப்பு துணிகளை கட்டி இருந்தனர்.


Next Story