வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: அரசு மருத்துவமனைக்கு படையெடுக்கும் நோயாளிகள்


வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: அரசு மருத்துவமனைக்கு படையெடுக்கும் நோயாளிகள்
x
தினத்தந்தி 13 Sept 2017 4:45 AM IST (Updated: 13 Sept 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் பகுதிகளில் பரவும் வைரஸ் காய்ச்சலால் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் படையெடுக்கின்றனர்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள எரியோடு, கோவிலூர், அழகாபுரி, கூம்பூர், கல்வார்பட்டி, விருதலைப்பட்டி, குட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் மாறுபட்ட சீதோஷ்ண நிலை நிலவுகிறது. பகலில் வெயில், மழையும், இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது.

மேலும் மழை தண்ணீர் தேங்கி இருப்பதால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தலைவலி, சளி, மூக்கடைப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் படையெடுக்கின்றனர்.

இதனால் மருத்துவமனையில் நோயாளிகள் வார்டு, மாத்திரை, மருந்து வழங்குமிடம், ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்யும் இடங்களில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. வழக்கமாக 200 முதல் 300 நோயாளிகளே தினமும் சிகிச்சைக்காக வருவார்கள். ஆனால் தற்போது 700 முதல் 800 நோயாளிகள் வருகிறார்கள்.

ஆனால் மருத்துவமனையில் போதிய ஊழியர்கள், டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சை பெறுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். எனவே மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள், ஊழியர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர் மகாராஜன் கூறும்போது, மழைக்காலம் தொடங்கியுள்ளதால் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தண்ணீரை காய்ச்சி குடித்தாலே சளி, காய்ச்சல் வராது. மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடாமல் மருத்துவரை அணுக வேண்டும் என்றார்.


Next Story