விபத்தில் இறந்த டிராக்டர் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு தராததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் இறந்த டிராக்டர் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு தராததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 13 Sept 2017 4:15 AM IST (Updated: 13 Sept 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் இறந்த டிராக்டர் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்காததால் ஆரணி கோர்ட்டு உத்தரவின்படி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

ஆரணி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா எதப்பட்டு கிராமம் பத்துக்கல் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 30). டிராக்டர் டிரைவர். கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அன்னவாசல் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு ஓட்டிச்சென்றார்.

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அன்னவாசல் அருகே சென்றபோது டிராக்டரின் டயர் பஞ்சராகி விட்டது. இதனால் அதனை ஓரமாக நிறுத்திவிட்டு பஞ்சரான டயரை மாற்றும் பணியில் ஏழுமலை ஈடுபட்டார்.

அப்போது திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு சென்ற கும்பகோணம் கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் ஏழுமலை அந்த இடத்திலேயே இறந்தார். இந்த விபத்தில் பஸ்சுக்குள்ளேயே பயணிகள் முட்டி மோதியதில் 20 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே இறந்த ஏழுமலையின் மனைவி மஞ்சுளா, தாயார் முனியம்மாள், தந்தை சின்னபையன் ஆகியோர் தங்களுக்கு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடக்கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய முடிவு செய்தனர். இது குறித்து அவர்கள் ஆரணியில் உள்ள தங்களது உறவினர் மூலம் ஆரணி சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஏழுமலையின் மனைவி மஞ்சுளா, தாயார் முனியம்மாள், தந்தை சின்னபையன் ஆகியோருக்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சத்து 32 ஆயிரத்தை வழங்கும்படி அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி உத்தரவிட்டார்.

ஆனால் பல மாதங்கள் ஆகியும் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்டஈடு வழங்கவில்லை. இதனையடுத்து அவர்கள் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிபதி வட்டியுடன் சேர்த்து ரூ.14 லட்சத்து 62 ஆயிரத்து 909 வழங்கும்படி உத்தரவிட்டார். அதன்பிறகும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை.

இதனையடுத்து கும்ப கோணம் கோட்டத்துக்கு உட்பட்ட அரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவின்பேரில் நேற்று காலை கோர்ட்டு அமினா மற்றும் வக்கீல்கள் ஆரணி புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது வேலூரிலிருந்து தஞ்சாவூருக்கு சென்ற கும்பகோணம் கோட்ட பணிமனைக்கு சொந்தமான அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சிலிருந்த பயணிகளை கீழே இறங்கும்படி கூறிய அவர்கள் பஸ்சை ஜப்தி செய்து அதற்கான நோட்டீசை ஓட்டினர். இதனை தொடர்ந்து கீழே இறக்கப்பட்ட பயணிகள் வேறு ஒரு பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story