அ.தி.மு.க. அலுவலகத்துக்கு தீவைப்பு; 2 பேர் மீது வழக்கு போலீஸ் குவிப்பு


அ.தி.மு.க. அலுவலகத்துக்கு தீவைப்பு; 2 பேர் மீது வழக்கு போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 13 Sept 2017 4:45 AM IST (Updated: 13 Sept 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோபாலசமுத்திரம் கீழவீதியில் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வாசலில் கீற்று பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள், அ.தி.மு.க. அலுவலக வாசலில் இருந்த பந்தலுக்கு தீவைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் பந்தல் மற்றும் அலுவலக பெயர் பேனரும் எரிந்து நாசமடைந்தது. இதுபற்றி அறிந்த அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். அதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி.லோகநாதன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. அலுவலக பொறுப்பாளர் சத்தியமூர்த்தி மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில் டி.டி.வி. தினகரனால் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.காமராஜ் மற்றும் நகர செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வக்கீல் ஆனந்தராஜ் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் சிலர் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு தீவைத்ததாக தெரிவித்திருந்தார். அதன் பேரில் எஸ்.காமராஜ், வக்கீல் ஆனந்தராஜ் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீஸ் குவிக்கப்பட்டு அ.தி.மு.க. அலுவலகத்திற்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.


Next Story