நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் –ஆசிரியர்கள் 850 பேர் கைது


நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் –ஆசிரியர்கள் 850 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sept 2017 3:00 AM IST (Updated: 13 Sept 2017 12:42 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 850 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல்லை,

நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 850 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜாக்டோ–ஜியோ

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். அதுவரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 22–ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அந்த கூட்டமைப்பை சேர்ந்த சங்கங்கள் சார்பில் கடந்த 7–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டமும் தொடங்கி நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் 60 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் வேலை நிறுத்தத்தை வருகிற 15–ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதன் பிறகு வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது.

மீண்டும் வேலை நிறுத்தம்

மேலும், ஜாக்டோ–ஜியோ போராட்டத்துக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை தடை விதித்தது. அந்த தடையையும் மீறி ஒரு சில சங்கங்கள் சார்பில் கடந்த 11–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. முதல் நாளில் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்று 2–வது நாளில் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரண்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த அரசு ஊழியர்கள் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களை பூட்டி விட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர். வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம் உள்ளிட்ட இடங்களில் பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் மூடிக்கிடந்தன. மேலும் நெல்லை கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், மாவட்டத்திலுள்ள தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

சாலை மறியல்

கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவர்கள் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். போராட்டத்துக்கு ஜாக்டோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ் ஆசீர் சார்லஸ் நீல், ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, பால்துரை ஆகியோர் தலைமை தாங்கினர்.

பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியல் செய்வதற்காக மெயின் ரோடு நோக்கி புறப்பட்டனர்.

கொக்கிரகுளம் மெயின் ரோட்டுக்கு வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றினர். ஆனால் அனைவரையும் அழைத்துச் செல்வதற்கு போதிய வேன் வசதி இல்லாததால் கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் ஓட்டல் வளாகத்தில் உள்ள மண்டபத்துக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடந்தே சென்றனர். மண்டபம் முன்பு சென்ற போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் ரோட்டில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக பிடித்து தூக்கி மண்டபத்துக்குள் அழைத்துச் சென்றனர். மேலும் அணி, அணியாக அவர்கள் சாலையை கடந்து சென்றதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

பின்னர் அவர்களை கைது செய்து மண்டபத்துக்குள் போலீசார் அடைத்து வைத்தனர். இதில் 400 பெண்கள் உள்பட 850 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இன்றைய போராட்டம்

இதுகுறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறுகையில், ‘‘இன்று (புதன்கிழமை) முதல் கோரிக்கைகளுக்கான அரசாணை வெளியிடும் வரை நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம்’’ என்றனர்.


Next Story