பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல்


பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Sept 2017 4:15 AM IST (Updated: 13 Sept 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 512 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தும் வரை 1-1-2016 முதல் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நட வடிக்கை குழுவான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் அங்கு துண்டினை தரையில் விரித்து படுத்து கொண்டு அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், இன்ஸ்பெக்டர்கள் தேவராஜ், ராஜ்குமார் உள்பட போலீசார், படுத்து கிடந்தவர்களை எழுந்துவிடுமாறு கூறினர். அப்போது போலீசார் அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவரின் கையை பிடித்து தூக்கினர். மேலும் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ஒருவழியாக போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி கைது செய்து வேனில் ஏற்றி ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார், ஆசிரியர் இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அருள்ஜோதி, கணேசன் மற்றும் மரியதாஸ், இளங்கோவன், தயாளன், மதியழகன் உள்பட 179 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் 65 பேர் பெண்கள் ஆவர்.

இதேபோல் அரியலூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றும் தொடர்ச்சியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அண்ணா சிலை அருகே ஒருங்கிணைப்பாளர் பஞ்சாபிகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் அரியலூர் பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 63 பெண்கள் உள்பட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 333 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மறியல் போராட்டம் நடத்தியதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 512 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். 

Related Tags :
Next Story