முகப்பேரில் பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 4 மாணவர்கள் காயம்


முகப்பேரில் பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 4 மாணவர்கள் காயம்
x
தினத்தந்தி 12 Sep 2017 11:00 PM GMT (Updated: 12 Sep 2017 7:32 PM GMT)

தனியார் பள்ளியின் வேன் மழை நீர் கால்வாய்க்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 4 மாணவர்கள் லேசான காயம் அடைந்தனர்.

அம்பத்தூர்,

சென்னை முகப்பேரில் வேலம்மாள் மெட்ரிகுலேசன் என்கிற தனியார் பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளை ஏற்றி செல்ல பள்ளிக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வேன்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர ஒப்பந்த அடிப்படையில் தனியார் வாகனங்களும் இயக்கப்படுகின்றன.

இந்த தனியார் பள்ளியில் தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. நேற்று மதியம் தேர்வு முடிந்ததும், ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் தனியார் வேன் ஒன்று 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் 18 பேரை ஏற்றிக்கொண்டு பள்ளியில் இருந்து புறப்பட்டது.

தலைக்குப்புற...

அயனாவரத்தை சேர்ந்த ஜேக்கப்(வயது23) என்பவர் வேனை ஓட்டி சென்றார். இந்த வேன் முகப்பேர் மங்கள ஏரி அசலாத்தம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் ஒரு லாரி வந்தது.

அந்த லாரிக்கு வழிவிடும் பொருட்டு வேன் டிரைவர், வேனை சாலையின் ஓரத்தில் திருப்பினார்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில், மழை நீர் கால்வாய்க்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது.

4 பேர் காயம்

வேனில் இருந்த மாணவ- மாணவிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்களும், போக்குவரத்து போலீசாரும் விரைந்து செயல்பட்டு மாணவ-மாணவிகளை மீட்டனர்.

வேன் மிதமான வேகத்தில் சென்று பள்ளத்தில் கவிழ்ந்ததால் மாணவ-மாணவிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் இந்த விபத்தில் 4 மாணவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப்பின் அவர்கள் வீட்டுக்கு சென்றனர்.

விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ‘கிரேன்’ உதவியோடு, பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த வேனை மீட்டனர்.

விபத்து தொடர்பாக போலீசார் வேன் டிரைவர் ஜேக்கப்பை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

குறுகிய சாலை

விபத்து நடந்த சாலை மிகவும் குறுகிய சாலை என தெரிகிறது. இந்த சாலையின் ஒரு புறம் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சமீபத்தில்தான் மணல் போட்டு மூடப்பட்டது.

சாலையின் மற்றொருபுறம் மழை நீர் கால்வாய் அமைப்பதற்கான பணிகள் கடந்த 6 மாத காலமாக நடந்து வருகிறது. இதுதவிர சாலையின் இருபுறமும் அதிக அளவில் ஆக்கிரமிப்புகளும் உள்ளன.

அதோடு இந்த சாலை வழியாக அடிக்கடி தண்ணீர் லாரிகள் செல்வதால் எப்போதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

மேற்கூறிய காரணங்களால் இந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். 

Next Story