வாகன விதிமுறைகளை மீறிய ஆந்திர மாநில 6 பஸ்கள் பறிமுதல் பயணிகள் சாலை மறியல்


வாகன விதிமுறைகளை மீறிய ஆந்திர மாநில 6 பஸ்கள் பறிமுதல் பயணிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Sept 2017 4:30 AM IST (Updated: 13 Sept 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் டோல்கேட் அருகே வாகன விதி முறைகளை மீறிய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 6 பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையொட்டி அந்த பஸ்களில் இருந்த பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் டோல்கேட் ரவுண்டானா அருகே நேற்று திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் நல்லத்தம்பி உள்ளிட்ட அதிகாரிகள் வாகனங்களின் ஆவணங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீரங்கம் காவிரி மகா புஷ்கர விழாவில் கலந்து கொண்டுவிட்டு அந்த வழியாக வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 6 பஸ்களை நிறுத்தி காப்பீடு, ஓட்டுனர் உரிமம், பயணிகளின் பெயர் பட்டியல், அனுமதி சான்றுகளை சோதனை செய்தனர்.

அப்போது பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகளின் அடையாள அட்டையை சோதனை செய்தபோது, பயணிக்க அனுமதி பெற்றிருந்தவர்களுக்கு பதிலாக வேறு பயணிகள் அமர்ந்திருந்தனர். இதனால் வாகன விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றி வந்ததால், போக்குவரத்து சட்டத்திற்கு உட்பட்ட அனுமதி வரியை செலுத்திவிட்டு, பஸ்களை எடுத்துச்செல்லுமாறு வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷ் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பஸ்களில் இருந்து கீழே இறங்கி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று விட்டனர்.

இதையடுத்து டோல்கேட் ரவுண்டானா பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். மறியலால் ரவுண்டானா பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பயணிகளுடன் 6 பஸ்களும் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷிடம் கேட்டபோது, தமிழகத்திற்கு ஆன்மிகம் மற்றும் இன்பச்சுற்றுலா வரும் மற்ற மாநில பஸ்கள் போக்குவரத்து வரி செலுத்தாமலும், விதிகளை மீறியும் வந்து செல்கின்றன. இதுபோன்ற வாகனங்களை சோதனையிட்டு கண்டுபிடிக்கும் பட்சத்தில் உரிய வரியை செலுத்திய பின்பு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இதில் ஆந்திராவுக்கும், தமிழகத்திற்கும் இடையே சுற்றுலா போக்குவரத்திற்கு இலவச வரி ஒப்பந்தம் உள்ளது. இதன் அடிப்படையில் அங்கிருந்து வரும் பஸ்கள் பயணிகளின் பெயர் பட்டியலை கொடுத்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி அனுமதி பெற்ற பயணிகளுக்கு பதிலாக வேறு பெயர் கொண்ட பயணிகள் பஸ்சில் பயணித்ததால் ஒரு இருக்கைக்கு ரூ.600 வீதம் தமிழகத்திற்கு போக்குவரத்து துறைக்கு வரி செலுத்த வேண்டும். அதன் அடிப்படையில் வாகன விதிமுறைகளை மீறி வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அந்த 6 பஸ்களை பறிமுதல் செய்துள்ளோம். வரியை செலுத்தியபிறகு பஸ்கள் விடுவிக்கப்படும். அதுவரை பஸ்கள் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story