பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்கக்கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவ–மாணவிகளுடன் பொதுமக்கள் போராட்டம்


பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்கக்கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவ–மாணவிகளுடன் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2017 4:45 AM IST (Updated: 13 Sept 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

பழுதடைந்த பள்ளிக்கட்டிடத்தை சீரமைக்கக்கோரி, பள்ளிக்கு பூட்டுபோட்டு மாணவ–மாணவிகளும் பெற்றோரும், பொதுமக்களும் போராட்டம் நடத்தினார்கள். மேலும் சாலை மறியலுக்கும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தெக்கலூர் ஊராட்சி புதுநல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 69 மாணவிகள், 47 மாணவர்கள் என மொத்தம் 116 பேர் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இளவரசி என்பவரும் மேலும் 3 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் முன்னோட்டமாக பள்ளி கட்டிடத்தின் முன்பகுதியில் உள்ள சிமெண்டு சிலாப்புகளின் காரைகள் பெயர்ந்து விழுந்தன. இதனால் சிமெண்டு சிலாப்புகளில் இருந்த இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு நிற்கிறது. மேலும் வகுப்பறையின் மேற்கூரையும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த வாரம் கோவை மாவட்டம் சோமனூர் பகுதியில் உள்ள பஸ் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியானதால், பொதுமக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டினார்கள். மேலும் இந்த பள்ளியின் மோசமான நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் இதுவரை முன்வரவில்லை.

எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், பள்ளியை பூட்டு போட்டு முற்றுகை போராட்டம் நடத்துவது என்று பொதுமக்கள் முடிவு செய்தனர். அதை தொடர்ந்து நேற்று காலையில் பள்ளி மாணவ–மாணவிகள் சீருடையுடன் பள்ளிக்கு சென்றனர். அவர்களுடன் பெற்றோரும், பொதுமக்களும் சென்றனர். பின்னர் பள்ளி நுழைவு வாயிலை பூட்டு போட்டு, நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக போராட்டம் நடத்தியும் கல்வி அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதனால் மாணவ–மாணவிகளுடன் பெற்றோரும், பொதுமக்களும் சாலை மறியலுக்கு முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் உதவி தொடக்க கல்வி அதிகாரி ஜோதிபிரகாஷ் மற்றும் கல்வி அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–

இந்த பள்ளிக்கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்து விட்டது. இதனால் இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம். எங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த கட்டிடம் குறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. மேலும் நேரிலும் பலமுறை வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் இல்லை. குழந்தைகளுக்கு எதுவும் நடந்தால்தான் கட்டிடத்தை சீரமைப்பார்களோ? என்னவோ தெரியவில்லை. எனவே பள்ளிக்கட்டிடத்தை உடனே சீரமைக்க வேண்டும். பள்ளிகட்டிடத்தை சீரமைக்கும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அப்போது அதிகாரிகள், “ இந்த பகுதியில் சமுதாய கூடம் இருந்தால் சொல்லுங்கள் பள்ளி கட்டிடம் சீரமைக்கும் வரை அங்கேயே பள்ளியை நடத்தலாம்“ என்றார். அதிகாரியின் இந்த பதிலை கேட்ட பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

அதன்பின்னர் அதிகாரிகள் “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடைபெறுகிறது. எனவே போராட்டம் வாபஸ் பெற்ற பின்னர் அதிகாரிகளின் முன்னிலையில் உங்களது கோரிக்கைகளை எடுத்துக்கூறி அடுத்த நடவடிக்கை எடுக்கலாம், அதுவரை காத்து இருக்க வேண்டும்“ என்றனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர். பெற்றோர், பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பள்ளிக்கு பூட்டுபோட்டு போராட்டம் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story