மாவட்ட செய்திகள்

குடும்பத்தலைவி படத்திற்கு பதிலாக ‘ஸ்மார்ட்’ ரேஷன்கார்டில் நடிகை காஜல் அகர்வால் படம் + "||" + Actress Kajal Aggarwal is in the role of 'Smart' instead of 'Family'

குடும்பத்தலைவி படத்திற்கு பதிலாக ‘ஸ்மார்ட்’ ரேஷன்கார்டில் நடிகை காஜல் அகர்வால் படம்

குடும்பத்தலைவி படத்திற்கு பதிலாக ‘ஸ்மார்ட்’ ரேஷன்கார்டில் நடிகை காஜல் அகர்வால் படம்
ஸ்மார்ட் ரேஷன்கார்டில் குடும்பத் தலைவி படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் படம் அச்சிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓமலூர்,

இந்திய தேர்தல் ஆணையம் அச்சிட்டு வழங்கும் வாக்காளர் அடையாள அட்டையில் ஆண் வாக்காளருக்கு பதிலாக பெண் வாக்காளரின் பெயர் மற்றும் புகைப்படம் மாறி இடம் பெறுவது கடந்த காலங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது. இதுபோன்ற தவறுகளை களைந்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுஒருபுறம் இருக்க தற்போது தமிழக அரசு பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வரும் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்பத்தலைவி ஒருவரின் படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் மாறி இடம் பெற்றுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் வடக்கு தாலுகா ஆர்.சி.செட்டிபட்டி காமலாபுரம் பகுதியை சேர்ந்த சரோஜா என்பவர் பெயரில் குடும்பத் தலைவர் என்று குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ரேஷன்கார்டில் தான் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதில் சரோஜா படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் படம் மாறி இடம் பெற்றுள்ளது.

நேற்று காலையில் இந்த ரேஷன்கார்டை கடை ஊழியர் சரோஜாவிடம் வழங்கும் போதே இந்த தவறை குறிப்பிட்டு திருத்தம் செய்து தருவதாக தான் கொடுத்துள்ளார். இருப்பினும் இதை பார்த்த சரோஜா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக வட்ட வழங்கல் துறையினரிடம் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த ஸ்மார்ட் ரேஷன்கார்டு வாட்ஸ்-அப்பிலும் வலம் வர தொடங்கி உள்ளது.

இதுபோன்ற தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.