சுப்ரியா சுலே விவகாரம் ‘என் கருத்தை திரும்ப பெற மாட்டேன்’ சஞ்சய் ராவுத் எம்.பி. திட்டவட்டம்


சுப்ரியா சுலே விவகாரம் ‘என் கருத்தை திரும்ப பெற மாட்டேன்’ சஞ்சய் ராவுத் எம்.பி. திட்டவட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2017 3:45 AM IST (Updated: 13 Sept 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரியா சுலே விவகாரத்தில் என் கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.

மும்பை,

சுப்ரியா சுலே விவகாரத்தில் என் கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரி பதவி

பிரதமர் மோடியும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் சந்தித்து பேசியபோது, சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி.க்கு மோடி கேபினட் அந்தஸ்திலான மத்திய மந்திரி பதவி அளிக்க முன்வந்ததாக சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் சமீபத்தில் தகவல் வெளியானது. சிவசேனா மூத்த தலைவரும், சாம்னா பத்திரிகை நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ராவுத் எம்.பி. இந்த கட்டுரையை வெளியிட்டிருந்தார்.

இது அரசியல் வட்டாரத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. அதே வேளையில், இந்த தகவலை பாரதீய ஜனதாவும், தேசியவாத காங்கிரசும் அடியோடு மறுத்தன. பரபரப்பான இந்த சூழலில், சஞ்சய் ராவுத் எம்.பி. நேற்று மும்பையில் நிருபர்களிடம் இதுபற்றி கூறியதாவது:–

தையரியமாக ஒப்புக்கொள்ளுங்கள்

அரசியலில் கண்டனங்களும், கருத்துகளும் எழுவது வாடிக்கையான ஒன்று தான். இதுபோன்ற விவகாரங்களில் மறைந்த சிவசேனா நிறுவன தலைவர் பால் தாக்கரேயிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். நடந்ததை தைரியத்துடன் ஒப்புக்கொள்ளுங்கள். நான் சொன்னது, சொன்னது தான். என் கருத்தை திரும்ப பெற மாட்டேன்.

இந்த வி‌ஷயத்தை நான் அரசியல்படுத்த விரும்பவில்லை. பா.ஜனதாவில் நான் சேர மாட்டேன் என்று சுப்ரியா சுலே கூறினால், அவர் சேர மாட்டார். ஆனால், பிரதமர் மோடியும், சரத்பவாரும் சந்தித்து பேசினார்களா, இல்லையா என்பதை அவர்களால் விளக்க முடியுமா?.

இவ்வாறு சஞ்சய் ராவுத் எம்.பி. தெரிவித்தார்.


Next Story