நீட்தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
நீட்தேர்விற்கு விலக்கு அளிக்கக்கோரி ராமநாதபுரத்தில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்,
நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கக்கோரி ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் தலைமை தாங்கினார். தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் மத்திய–மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனிதாவின் மரணத்திற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் பேசியதாவது:– தமிழக அரசு பெரும்பான்மையை இழந்து தள்ளாடி வருகிறது. இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற நிலை உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் எந்த அரசு பணியும் நடைபெறாமல் முடங்கிப்போய் உள்ளது. விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாருடைய கோரிக்கையையும் இந்த அரசு நிறைவேற்றுவதாக இல்லை. மாநிலத்தின் நலன்களையும், விவசாயிகள் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகளையும் இந்த அரசு ஏற்க மறுத்து மத்திய அரசுக்கு பல்லக்கு தூக்கி வருகிறது. முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கின்றனர். இதனால் அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்தங்கி வருகிறது. மாணவ–மாணவிகள் அவர்கள் விரும்பக்கூடிய பாடங்களை படிக்கும் வகையில் கல்வி முறை அமைய வேண்டும். நுழைவுத்தேர்வுகள் ஒருபோதும் தமிழகத்திற்கு தேவையே இல்லை.
தமிழக கல்வி முறையில்தான் எத்தனையோ சிறந்த மாணவர்கள் டாக்டர்கள், பொறியாளர்கள் என படித்து உலக அளவில் சிறந்து விளங்குகின்றனர். மறைமுகமாக திராவிட கலாச்சாரத்தை அழித்து இந்தியையும், காவி கொள்கையையும் பாடத்திட்டத்தில் புகுத்துவதற்காக இந்தியா முழுவதும் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க. இருக்கும் வரை மத்திய அரசின் இந்த எண்ணம் தமிழகத்தில் நிறைவேறாது. நீட் தேர்வுக்கு எதிராக இதுபோன்ற அறவழி போராட்டங்கள் தொடரும். நீட் தேர்வு காரணமாக ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.
இதை கண்டுகொள்ளாத தமிழக அரசை மாணவர்களும், பெற்றோர்களும் மன்னிக்கவே மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, நகர் செயலாளர் கார்மேகம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இன்பாரகு, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் உடையநாயகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திசைவீரன் உள்பட தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், முத்துராமலிங்கம், நகர் தலைவர் கோபி, திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டியன், முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் வருசை முகமது, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அன்வர், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் காசிநாததுரை, மற்றும் பார்வர்டு பிளாக் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சியினர், மூவேந்தர் முன்னணி கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.