தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 674 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். போராட்டத்துக்கு ஜாக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். ஆசிரியர் சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாலை வரை பெண் ஊழியர்கள், ஆசிரியைகள் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பது என்றும், ஆண் ஊழியர்கள், ஆசிரியர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் போராட்டத்தின் போது அறிவித்தனர். இதற்காக இரவு சமையல் செய்வதற்கான பொருட்களை தயார்படுத்தி வைத்து இருந்தனர்.
இந்த நிலையில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவு வந்துள்ளதாக கூறி போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு சேது தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 454 பெண்கள் உள்பட மொத்தம் 674 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். போராட்டம் தொடங்கிய போது அங்கு அமைக்கப்பட்டு இருந்த பந்தலுக்கு அடியிலும், மரங்களின் நிழல்களிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமர்ந்து இருந்தனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் அறிவித்ததால் கூட்டம் கொஞ்சம், கொஞ்சமாக குறையத் தொடங்கியது. பலரும், தாங்கள் கைதாக விருப்பம் இல்லை என்று கூறி அங்கிருந்து புறப்பட தொடங்கினர். அவர்களை நிர்வாகிகள் மீண்டும் போராட்டத்துக்கு வருமாறு அழைத்தனர். நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்டு சென்றனர்.