நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைமையில் அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தேனியில், தி.மு.க. தலைமையில் அனைத்து கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தேனி,
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்கு நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் தி.மு.க. தலைமையில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தேனி மாவட்ட தி.மு.க. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் நேற்று நடந்தது.
போராட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட தலைவர் சாகுல்அமீது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் காசிராஜன், சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ஜெய்முருகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் தி.மு.க. மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் எல்.மூக்கையா, தி.மு.க. நகர செயலாளர் இலங்கேஸ்வரன் மற்றும் அனைத்து கட்சிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.