மதிய உணவு சமைத்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 329 பேர் கைது


மதிய உணவு சமைத்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 329 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sept 2017 4:30 AM IST (Updated: 13 Sept 2017 11:16 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் மதிய உணவு சமைத்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 329 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

7–வது ஊதியக்குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமி£கம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ‘ஜாக்டோ–ஜியோ’ அமைப்பினர் கடந்த 7–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலுக்கு வந்தனர்.

இவர்கள் அனைவரும் அங்கு காலை 9 மணியளவில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரமேஷ், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி பாரி, தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் சம்பத், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாவட்ட செயலாளர் பாலமுருகன், சி.ஐ.டி.யு. போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் மூர்த்தி, வணிக வரி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பாலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து போராட்டக்குழுவினர் கூறுகையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘ஜாக்டோ– ஜியோ’ அமைப்பினராகிய நாங்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இன்று (அதாவது நேற்று) காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளோம். இனியும் அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காணாவிட்டால் காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றனர்.

இந்த நிலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று மதிய உணவை அவர்களே சமைத்து சாப்பிட முடிவு செய்தனர். இதற்காக அடுப்பு, பாத்திரங்கள் மற்றும் அரிசி, காய்கறிகள் ஆகியவற்றை கொண்டு வந்து சமைக்க தொடங்கினார்கள். சுமார் 1 மணி நேரத்தில் உணவு தயார் செய்து போராட்ட இடத்தில் வைத்தே அனைவரும் மதிய உணவு சாப்பிட்டனர். அதன் பிறகும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்த சென்று போராட்டத்தை முடித்துக்கொண்டு கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 43 பெண்கள் உள்பட 329 பேரை போலீசார் கைது செய்து, காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். பின்னர் அனைவரும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.


Next Story