மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர்கள்–அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனர்.
மதுரை,
ஜாக்டோ– ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த 7–ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.
ஐகோர்ட்டு தடை, அரசின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் 17 சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அதன்படி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு நேற்று காலையில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வந்தனர். அங்கு போடப்பட்டிருந்த பந்தலிலும், வெளியிலும் 1,500–க்கும் மேற்பட்டோர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வப்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் அங்கே போராட்டம் நடத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் சமையல் செய்யப்பட்டு உணவு பரிமாறப்பட்டது.
போராட்டம் காரணமாக வருவாய்த்துறை, தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வருவாய், சாதி, இருப்பிடச் சான்றிதழ்கள் போன்றவை வாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.