வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்காவிட்டால் என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலங்களை கொடுக்க மாட்டோம்


வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்காவிட்டால் என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலங்களை கொடுக்க மாட்டோம்
x
தினத்தந்தி 14 Sept 2017 5:45 AM IST (Updated: 14 Sept 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்காவிட்டால் என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலங்களை கொடுக்க மாட்டோம் என்று கெங்கைகொண்டான் பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கடலூர்,

விருத்தாசலம் வட்டம் கெங்கைகொண்டான் பேரூராட்சியை சேர்ந்த அகிலாண்டகெங்காபுரம், பழைய தாண்டவன்குப்பம், காமராஜர்நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

நாங்கள் கடந்த 1957 மற்றும் 1961–ம் ஆண்டுகளில் 2 முறை நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு எங்கள் நிலங்களை மிக குறைந்த விலைக்கு கொடுத்துள்ளோம். ஆனால் எங்களுக்கு நிர்வாகம் எந்த ஒரு வேலைவாய்ப்போ, மாற்று இடமோ வழங்கவில்லை. தற்போது மீதியுள்ள ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலங்களை வைத்து கெங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.

அந்த நிலத்திலும் என்.எல்.சி. சாம்பல் ஏரி 1998–ம் ஆண்டு உடைப்பெடுத்து, நிலங்கள் முழுவதும் வீணாகி விட்டது. அதை சரி செய்து தற்போது விவசாயம் செய்து வருகிறோம். இந்த 3 பகுதியில் உள்ள 500 குடும்பத்தினருக்கு என்.எல்.சி. நிர்வாகம் இது வரை எவ்வித அடிப்படை வசதியும் செய்து தர வில்லை.

இந்நிலையில் முதல் சுரங்க விரிவாக்க பணிக்காக எங்கள் பகுதி நிலங்கள் தேவைப்படுவதாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. எங்கள் நிலங்களை கொடுக்க சம்மதம் இல்லை என்று ஏற்கனவே நாங்கள் மனு அளித்துள்ளோம். ஆனால் நிர்வாகம் ஒரு சிலருக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்கு அழைத்து அவர்களிடம் கையொப்பம் பெற்று வருகிறது.

எங்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்காவிட்டால் என்.எல்.சி. நிறுவனத்துக்கு எங்களின் நிலங்களை கொடுக்க மாட்டோம். ஆகவே பகுதியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story